Breaking News

கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியை தற்கொலைக்கு முயற்சி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்:

தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறிய ஆசிரியை, கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மு.கருணாகரன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார்.
மானூர் யூனியன் கானார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாடினர். அங்கு வந்த சிலர் தகராறு செய்தனர். மாணவர்களை தாக்கியும் உள்ளனர். இதுகுறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாணவர்களை தாக்கியவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
வீட்டு மனைப்பட்டா
பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நாங்கள் பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீட்டு தீர்வை செலுத்தி வருகிறோம்.
குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பையும் முறையாக பெற்று இருக்கிறோம். நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
ஆசிரியை தற்கொலை முயற்சி
வாசுதேவநல்லூர் அருகே உள்ள டி.ராமநாதபுரம் குருசாமி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ராஜேசுவரி. இவர் நேற்று தன்னுடைய 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவர் திடீரென்று தனது கையில் வைத்து இருந்த விஷ மருந்து பாட்டிலை திறந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், விஷ மருந்து பாட்டிலை ஆசிரியையிடம் இருந்து பிடுங்கினர். பின்னர் ஆசிரியையிடம் சமரசம் பேசி, கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.
பாலியல் புகார்
அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நான் குருசாமி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறேன். பள்ளி தலைமை ஆசிரியர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னை அவதூறாக பேசி வருகிறார். பொய்யான காரணம் காட்டி என்னை 2 மாதம் தற்காலிக பணி நீக்கம் செய்தார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எனது பணி நீக்கத்தை ரத்து செய்தார். மீண்டும் வேலை செய்து வருகிறேன். என்னை வேலை செய்ய முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது