Breaking News

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் மையத்தில் பயிற்சி

பாடங்களில் மாதிரிகளை தயாரித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்றுத் தருவது தொடர்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு 3 நாள்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் அனைத்து மாணவர், மாணவிகளையும் 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்யவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்றுத்தரும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதிரிகள் தயாரிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் குறிப்பிட்ட சில பள்ளிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மைய உதவியை கல்வித்துறை நாடியுள்ளது. இதன்படி, அறிவியல் மையத்தில் உள்ள தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு மாதிரிகளை உருவாக்குதல் குறித்து பயிற்சி அளிக்கவுள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் தொடக்க விழா, மாவட்ட அறிவியல் மையத்தில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன், பயிற்சி வகுப்பை தொடங்கிவைக்கிறார். இந்தப் பயிற்சி வகுப்பில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட மாதிரிகளை உருவாக்கும் வகையிலான பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு அவரவர் பாடங்கள் தொடர்பான மாதிரிகளை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 3ஆவது நாளில் ஆசிரியர்கள் அந்த மாதிரிகளை தயார் செய்து முடிப்பர். அவற்றின் செயல்பாடுகளை மாணவர்களுக்கு கற்றுத்தருவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.