Breaking News

107 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: 6ம் வகுப்பில் புதிதாக துவங்க உத்தரவு



கோவை :கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், 107 அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கென தனிவகுப்பு துவங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி துவக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரால் உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2012-13ம் கல்வியாண்டில், ஊரக பகுதி மாணவர்களின் ஆங்கிலத்திறன் மேம்பாட்டுக்காக மாநில அளவில், 165 அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளிலும், 2013-14ல், 1,048 பள்ளிகளிலும், 2014-15ம் கல்வியாண்டில் 1,485 பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, ஆறாம் வகுப்பில் துவங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில், 257 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், 150 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டு செயல்பாட்டிலுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், புதிதாக, 13 பள்ளிகளில் துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில், மீதமுள்ள அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளிலும் நடப்பாண்டே ஆங்கில வழிக்கல்வி செயல்படுத்த உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், 257 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் துவங்கப்பட்டதை தவிர்த்து, நடப்பு கல்வியாண்டில், புதிதாக ஆறாம் வகுப்பில், 107 உயர்நிலை மேல்நிலைபள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி துவங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில், ஒரு பிரிவு ஆங்கில வழிக்கல்வியாக செயல்படும்,'' என்றார்.