Breaking News

பள்ளிகளில் பெயரளவில் செயல்படும் பெற்றோர்-ஆசிரியர் கழகம்

பெற்றோர்-ஆசிரியர் கழகம் பெயரளவில் அன்றி, பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:
தமிழக அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளிலும் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் (ஆய்வகம், வகுப்பறை, கழிப்பறை) செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் 2014-15ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பாட ஆசிரியர்கள், 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்க வேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் கழகம் பெயரளவில் இருப்பதைத் தவிர்க்கவும், சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடும் வகையில் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2015-16 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி, காலிப் பணியிடங்களை மறைக்காமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.