Breaking News

விடுப்பில் சென்றுவிட்ட அதிகாரிகள்: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டாத தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 17 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தபோதிலும், அவர்களைப் பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் யாருமே வியாழக்கிழமை ஊரில் இல்லாதது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மாநில அளவில் முதலிடத்தையும், மூன்று மாணவிகள் இரண்டாவது இடத்தையும், 13 பேர் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். மாவட்ட அளவிலும் இவர்களே முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளனர். வழக்கமாக, அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை, மாவட்ட ஆட்சியர் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்வது வழக்கம்.


அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்துப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார், தனது சொந்த விருப்ப நிதியில் இருந்து ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் பகிர்ந்து கொண்ட நிலையில், அவர்களைப் பாராட்ட மாவட்ட நிர்வாகத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் விடுமுறையில் சென்றுவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த இரா. முத்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அந்தப் பதவி இதுவரை நிரப்பப்படவில்லை. இதேபோல, முக்கியப் பணியில் இருக்க வேண்டிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான க. முனுசாமியும் வியாழக்கிழமை விடுப்பில் சென்றுவிட்டார். உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மாணவர், மாணவிகள் உடனடியாகப் பாராட்டப்படாத நிலை ஏற்பட்டது.