Breaking News

இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்! தனியார் பள்ளிகள் புது முடிவு

கட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் மானியம் தரவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு புதிய முடிவு எடுக்க வேண்டியசூழல்எழுந்துள்ளது.
கோரிக்கை:இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 2013 - -14-ல், 49,864; 2014 - -15ல், 86,729 ஏழைகள், நலிவடைந்த பிரிவு குழந்தைகள், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்கு, 2013 -- 14க்கு, 25.13 கோடி; 2014 - -15க்கு, 71.91 கோடி ரூபாய் வழங்க, தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. இந்த நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனால், மத்திய அரசு வெறும், 14 லட்சம் ரூபாய் மட்டுமே அனுமதித்தது. எனவே, தமிழக அரசே, 96 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டது.


இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து, தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார்
கூறியதாவது:கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,யில் மாணவர்களை சேர்க்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக, மாணவர்களை சேர்த்தோம்.
ஆனால், நிதி வராமல் தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. தற்போது நிதி தருவதாக, தமிழக அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. மத்திய அரசின் சட்டப்படி, ஆறு வயதுக்கு மேல், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதனால் தான், மத்திய அரசிடம் இருந்து எல்.கே.ஜி., சேர்க்கைக்கு, நிதி வராமல் தாமதம் ஏற்பட்டது.

எனவே, இந்த விஷயத்தில், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, மாணவர் சேர்க்கை நிதிக்கு உத்தரவாதம் தர வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு, பாடப் புத்தகங்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், கட்டாயக் கல்விச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, அரசே இலவசமாக புத்தகங்களை வழங்க வேண்டும்.

ஏற்பாடு

கட்டாயக் கல்விச் சட்ட மானியத்தை, பெற்றோரின் வங்கிக் கணக்கில், அரசு செலுத்தி விட்டு, மாணவர் கள் நேரடியாக பள்ளிகளில் கட்டணத்தை செலுத்த, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாயக் கல்விச் சட்ட மாணவர் சேர்க்கைக்கான நிதியை தர, தமிழக அரசு மறுத்துஉள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளது; இதற்கும், உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

இரு தவணைகளில் வழங்க வேண்டும்: தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர், மார்டின் கென்னடி கூறியதாவது:இந்த பிரச்னையில், விரைந்து முடிவு எடுக்குமாறு, மே 25ம் தேதி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளோம். மத்திய அரசின் சமையல் காஸ் மானிய திட்டம் போல், கட்டாயக் கல்விச் சட்ட நிதியை, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கில் அரசு வழங்க வேண்டும். நாடு முழுவதும், பல மாநிலங்களில் இந்தச் சட்டம் உள்ளது. இது தொடர்பாக, சமீபத்தில் மாநிலம் தழுவிய பள்ளி சங்கங்களின் இணைப்பான, தேசியப் பள்ளிகள் அசோசியேஷன் கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. கட்டாயக் கல்விச் சட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை, தமிழக அரசு தர, இரு ஆண்டுகளுக்கு மேல் தாமதமானதால், பள்ளி நிர்வாகச் செலவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு வரும் காலங்களில், செப்டம்பர் மற்றும் மார்ச் என, இரு தவணைகளில், நிதியை தாமதிக்காமல் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.