Breaking News

SLAS தேர்வு - ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது. 

பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வகம், நுாலகம், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப, மாணவர்களின் கல்வி யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை, 'ஸ்லாஸ்' தேர்வின் மூலம், பள்ளி கல்வித்துறை முடிவு செய்கிறது. ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, இந்த ஆண்டுக்கான, 'ஸ்லாஸ்' தேர்வு, டிசம்பரில் முடிந்து விட்டது. தமிழகம் முழுவதும், 6,200 பள்ளிகளில், தலா, 30 மாணவர்கள் என, 3.72 லட்சம் பேரிடம் இத்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் இரு வாரங்களில், இதன் முடிவுகள் வெளியாகின்றன.

இது குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அறிவொளி கூறியதாவது: சாதனை கணக்கெடுப்பான, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவுகளின்படி, திறன் படைத்த மாணவர்கள் எந்த பள்ளியில் உள்ளனர்; அவர்களுக்கு, பிரச்னையாக உள்ள பாடப்பகுதி எது என்பதை, அறிய முடியும்.அதற்கேற்ப, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.