Breaking News

ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு

 'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 


தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண் வாங்கப்படுகிறது. பலர், ஆதார் கார்டு விபரம் தராமல் அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது. 

இதனால், ஆதார் விபரம் பதியாத ரேஷன் கார்டை முடக்கி வைக்க, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 93 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்துஉறுப்பினர்களின், ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர். 

முடக்க, முடிவு

மீதி கார்டுதாரர்கள், தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் ஆதார் விபரம் மட்டும் வழங்கியுள்ளனர். ஆனால், நான்கு லட்சம் கார்டுதாரர், ஆதார் விபரம், மொபைல் எண் என, எதையும் ரேஷன் கடைகளில் பதிவு செய்யவில்லை. 

பதிவு செய்ததும் பொருட்கள்

எனவே, இவர்களின் கார்டுகளை மட்டும், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'பில்' போட முடியாதவாறு முடக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு, அவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்திய பின், கார்டு மீதான முடக்கத்தை ரத்து செய்வர். பின், அந்த கார்டுதாரர், ரேஷன் கடைக்கு சென்று, ஆதார் பதிவு செய்ததும், பொருட்கள் வழங்கப்படும். எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், விரைவாக, ஆதார் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.