வழக்கு முடிந்தவுடன் அறிவிப்பு வரும், ஜனவரியில் வந்துவிடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்காமலேயே ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தகுதித் தேர்வை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பி.எட் பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
NCTE வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியே தீரவேண்டும். வழக்கை காரணம் காட்டி கடந்த மூன்றாண்டுகளாக நடத்தாமல் இருந்தவர்கள் இப்போது சொல்லும் காரணங்களால் மீண்டும் வழக்குகளை நோக்கி இளைஞர்களை தள்ளுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
மத்திய அரசு CTET தேர்வினை இதுவரை சுமார் பத்து முறை நடத்திவிட்டது. ஆனால் மாநில அரசு இதுவரை 3 முறை மட்டுமே நடத்தியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிக்கை தனி, ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிக்கை தனி. இவற்றை டி ஆர் பி தனித்தனியாகவே வெளியிடும். ஆசிரியர் நியமனங்களே இல்லாத போதும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தலாம். சான்றிதழ் பெற்று வைத்துள்ளவர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வரும்போது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியும்.
தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பானது தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களின் உரிமையை பறிப்பதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் அமைந்து விடக் கூடியது. தகுதித் தேர்வை நடத்தி அதில் வெற்றி பெறுகிறவர்களையும் சேர்த்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தினால் சர்ச்சைகளுக்கு இடமிருக்காது. மாறாக தகுதித் தேர்வு நடத்தாமல் ஆசிரியர் நியமனம் செய்ய முடிவெடுத்தால் பாதிக்கப்படும் இளையவர்கள் மீண்டும் வழக்கு, வாய்தா என நீதிமன்றத்தின் படியில் நிற்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
சரி அப்படியே அமைச்சர் சொல்லுகிறபடி ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்புவதென்றால் தற்போது காலியாக உள்ள சுமார் 2000 பணியிடங்களுக்கு ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள முப்பதாயிரம் பேர் கருதப்படுவார்கள். வெயிட்டேஜ் முறையிலான கட்ஆப் அடிப்படையில் நியமித்தது போக எஞ்சிய 28000 பேர் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிவிடப்பட்டால் தகுதித் தேர்வை எப்போதுதான் நடத்துவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
மேலும் இத்தகைய முடிவுகளால் பாதிக்கப்படுவது இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமல்ல. ஏற்கனவே தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காமல் இம்ப்ரூவ்மெண்ட் எழுதி மதிப்பெண்களை அதிகரிக்க நினைத்தவர்களும் தான்.
எப்படியோ தகுதித் தேர்வினையும் வழக்குகளையும் பிரிக்கவே முடியாது போல.