மைக்கேல் பேஜ் எனப்படும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், நாட்டில் 2017ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு நிலவரம் பற்றி சில புள்ளி விபரங்களை தந்துள்ளது. இந்திய நிறுவனங்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவை புதிதாக பணி நியமனங்களை உருவாக்கும்
என மைக்கேல் பேஜ் எதிர்பார்க்கிறது. வரும் ஆண்டில் உருவாகும் வேலைகளில் 45 சதவீதத்துக்கும் மேலான வேலைகள் அதிகாரி நிலை பணிகளாகும். 88 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் 6 முதல் 15 சதவீத சம்பள உயர்வை ஊழியர்களுக்கு அளித்திடும் என இந்த ஆய்வு கூறுகிறது. பொதுவாக இந்தியாவில் 44 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பளம் என்னும் ஒரே காரணத்திற்காக ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறுகிறார்கள் என்று மைக்கேல் பேஜ் கூறுகிறது
வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஆகிய 3 காரணங்களினால் மட்டுமே ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் தொடர்வது தீர்மானிக்கப்படுகிறது.
வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சீராக தொடரும் என இந்த சர்வே கூறுகிறது. உலக பொருளாதார நிலையை தாண்டி சீராக நாட்டிற்குள் வரும் நேரடி அந்நிய முதலீட்டின் காரணமாக வளர்ச்சி சீராக தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் பொதுவான பொருளாதார வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது. மொத்தத்தில் புதிய ஆண்டில் (2017) பொதுவாக தனியார் துறை வேலை வாய்ப்புகள், 2016ல் இருந்ததை விட குறைய வாய்ப்பில்லை என்பது, இளைஞர்களுக்கான நல்ல செய்தி.