கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தொடர்பாக, பிப்., ௧௫ல், அரசு கல்லுாரி பேராசிரியர்கள், சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளளனர்.தமிழகம் முழுவதும், 89 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்காலிக பணி நியமன அடிப்படையில், ௧௯௯௮ முதல் கவுரவ விரிவுரையாளர்கள், பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, மாத ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், தங்களுக்கு, மாதம், 25ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, கவுரவ விரிவுரையாளர்கள், அரசுக்கு மனு அளித்து வந்தனர். அரசு, இதுகுறித்து உரிய முடிவு எடுக்கவில்லை.
ஒரு வாரமாக கவுரவ விரிவுரையாளர்கள், தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அரசு கலை கல்லுாரியில், நேற்று மறியலில் ஈடுபட்ட, ௭௫ பேராசிரியர்களை போலீசார் கைது செய்தனர். அதனால், பேராசிரியர்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அரசு கல்லுாரி பேராசிரியர்கள் இணைந்து, பிப்., ௧௫ல் கல்லுாரி கல்வி இயக்குனர் வளாகத்தை முற்றுகையிட உள்ளனர்.
அதனால், கல்லுாரிகளில் வகுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து,'நெட், ஸ்லெட்' சங்க தலைவர் பேராசிரியர் தங்க முனியாண்டி கூறியதாவது:அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களில், 'நெட், ஸ்லெட்' மற்றும் பி.எச்டி., தகுதி பெற்றவர்கள் மட்டுமே, ௧,௦௦௦ம் பேர் உள்ளனர்.
எனவே, விரிவுரையாளர்களுக்கு, ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து முடிவு எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.