Breaking News

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஆசிரியர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்


   சென்னை,பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. 



காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் முடிவு செய்கின்றனர்.

‘ஜாக்டோ’

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (‘ஜாக்டோ’) பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கடந்த மாதம் (ஜனவரி) 30, 31-ந்தேதிகளிலும், கடந்த 1-ந்தேதியும் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து, அடுத்தக்கட்ட போராட்டமாக மனித சங்கிலி போராட்டத்தையும், கோட்டையை நோக்கி மறியல்-முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்தனர்.

மனிதச்சங்கிலி போராட்டம்

அதன்படி, நேற்று அரசு ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கத்தில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தில் இருந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரை நூற்றுக் கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைகோர்த்து, மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கரபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டங்களாக போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு, நிதிஅமைச்சர் தலைமையில் 5 அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். இடைக்கால பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளிவரும் என்று சொன்னார்கள். ஆனால், எந்தவித அறிவிப்பும் வரவில்லை.

வேலைநிறுத்தம் குறித்து இன்று முடிவு

இதையடுத்து, 18-ந்தேதி உயர்மட்டக்குழு கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவித்தோம். அதில் ஒன்று தான் இன்று (நேற்று) நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டம் ஆகும். சட்டசபையில், முதல்-அமைச்சர் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது ஏமாற்றுவேலை.

வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் ஆசிரியர்களை சென்னைக்கு வரவழைத்து தலைமை செயலகம் முற்றுகை-மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். 25-ந்தேதிக்கு பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக நாளை (இன்று) திருச்சியில், மாநில ஜாக்டோ பொதுக்குழு கூடி முடிவு செய்ய இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.