கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர், எட்டு நாட்களாக, சென்னையில், கல்வித்துறை தலைமை அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 25 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, சங்கத்தினருடன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் பேச்சு நடத்தினார். பின், கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் ஆசிரியர்களின் சம்பளத்தில் தவறு நிகழ்ந்துள்ளதை அரசு செயலரும் கண்டுபிடித்தார்.இதை தொடர்ந்து, போராடிய ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் போது, சரி செய்வதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவும் தருவதாக அதிகாரிகள் கூறியதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.