ஊதிய பட்டியலை திருத்தி மோசடி அரசு பள்ளி ஊழியர் 'சஸ்பெண்ட்'
ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அரசு பள்ளி இடைநிலை உதவியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, இளநிலை உதவியாளர் கண்ணன் என்பவர், முறைகேடாக ஊதியம் பெற்று வருகிறார் என்று, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, கடந்த 4ம் தேதி, அந்த பள்ளியில் ஆய்வு நடத்திய போது, இளநிலை உதவியாளர் கண்ணன் தன் ஊதியத்துடன், ஒவ்வொரு மாதமும், 5,000 ரூபாய் வரை, ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, கூடுதலாக பெற்றுவந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தசாமி தலைமையில், உரிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், 2011ல் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படியாக, ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, 15 லட்சம் ரூபாய் மோசடிசெய்தது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கை அடிப்படையில், இளநிலை உதவியாளர் கண்ணனை சஸ்பெண்ட் செய்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.