Breaking News

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது செயல்முறைகளில் மாற்றம்


மத்திய அரசு நிதியுதவி வழங்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'க்கான செயல்முறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு- - இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் குழுவுக்கு, தலா, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துக்கு உதவும் வகையில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
தமிழகத்தில் இவ்விருதுக்கு, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்து, தலா ௫,௦௦௦ ரூபாய் உதவித்தொகையை பெற்றுள்ளனர். இந்த உதவித்தொகை மூலமாக, தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த வேண்டும்.
தற்போது, அவற்றில் சிலமாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.மாணவர்களின் அறிவியல் செயல்முறைகள், விருதுக்கான விழாவில் காட்சி படுத்துவதோடு நின்று விடாமல், சமூகத்துக்கு பயன்படும் வகையிலும், அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவும் வகையிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்களான 'மேக் இன் இந்தியா' 'ஸ்வச் பாரத்' 'ஸ்வஸ்த் பாரத்' 'டிஜிட்டல் இந்தியா' ஆகிய திட்டங்களுக்கு உதவும் வகையில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், புதிய கருவிகள் மற்றும் கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பம், புது வகை பொருட்கள் ஆகியவற்றில், மாணவர்கள் செயல்முறை விளக்கங்களையும், வடிவங்களையும் தயார் செய்ய வேண்டும்.
இப்புதிய மாற்றங்களை பின்பற்றி, அறிவியல் செயல்முறைகளை உருவாக்கும் படி, பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.