இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்
மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.
பள்ளி அளவில் அறிவியல் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையில் மாணவர் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் சுற்று சூழல் மற்றும் அறிவியல் தொடர்பான புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும். இது கல்வி மாவட்ட அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் முதலிடம் பெறும், சிறந்த அறிவியல் படைப்பாளருக்கு மத்திய அரசின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது. இந்த விருது செயல்முறையில் மாற்றம் செய்து பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவர் கூறும்போது: இன்ஸ்பயர் விருது நிகழ்ச்சி முடிந்தவுடன், மாணவரின் கண்டுபிடிப்பும் காட்சி பொருளாக பள்ளியிலோ, அவரது வீட்டிலோ வைக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில், வரும் ஆண்டுகளில், மத்திய அரசின் “மேக் இன் இந்தியா, சுவச் பாரத், டிஜிட்டல் இந்தியா' ஆகிய திட்டங்களுக்கு உதவும் வகையில் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, விருதுக்கான விழாவில் காட்சி படுத்துவதோடு நின்று விடாமல், சமூகத்துக்கு பயன்படும் வகையில் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது, என்றார்.