சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
'கட்டண பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் தலித், அருந்ததியர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில், பெரும் பகுதியை, உதவித்தொகையாக மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்த தொகை, கல்வி நிறுவனங்களுக்கு, தமிழக அரசு மூலம் வழங்கப்படுகிறது.
'சில ஆண்டுகளாக, தமிழக அரசிடமிருந்து, இந்த நிதி முறையாக தங்களுக்கு கிடைக்கவில்லை' என, கல்வி நிறுவனங்கள் சார்பில் புகார் எழுந்தது. அதனால், கட்டண பாக்கி வைத்த மாணவர்கள் தேர்வு எழுத, பல இன்ஜி., கல்லுாரிகள் தடை விதித்தன.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புகார்கள் வந்ததால், கல்லுாரிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்பின், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேர்வு எழுதிய பின், கட்டண பாக்கி வைத்திருந்த மாணவர்களின் சான்றிதழ்களை, இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் தராமல் வைத்து கொண்டன.
அதனால், வேலை வாய்ப்புக்கும், உயர் படிப்புக்கும் செல்ல முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, உயர் கல்வித்துறையில், மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, அனைத்து இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தொழில்நுட்ப கல்வித்துறை, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் 'அனைத்து கல்லுாரிகளும், கட்டண பாக்கிக்காக, மாணவர்களிடம் பிடித்து வைத்துள்ள சான்றிதழ்களை, தாமதமின்றி வழங்க வேண்டும். அரசிடம் இருந்து உரிய நேரத்தில் நிதி கிடைக்கும். அதற்காக, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வியில் முட்டுக்கட்டை போடக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.