Breaking News

வாக்குசாவடி அதிகாரிகளுக்கு 3 நாட்கள் முன்பே பணி ஆணை: தேர்தல் அதிகாரியிடம் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்


இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சென்னையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அவர்களிடம் விவாதித்தார்.


இந்த கூட்டத்திற்கு இடையே தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தலைமையில் நிர்வாகிகள் தயாளன், ஜான்லெஸ்லி, ஜெயராமன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


மனுவில் கூறியிருப்பதாவது:–தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.வயது முதிர்வும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


வாக்குசாவடி தேர்தல் அதிகாரிகளுக்கான நியமன ஆணைகளை 3 நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும்.தேர்தல் ஆயத்த பணிகளுக்காக தேர்தல் நடைபெறும் முந்தைய நாள் காலை 11 மணிக்கே வாக்கு சாவடிக்கு சென்று மறுநாள் இரவு 11 மணிவரை தொடர் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன.


இந்திய தேர்தல் அதிகாரியிடம் ஜாக்டா அமைப்பினனர் கோரிக்கைகளை எடுத்து கூறியதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி உறுதி அளித்தார்.