Breaking News

பி.எட்., எம்.எட்., 2 ஆண்டு படிப்பு வசதியை நிறைவேற்ற உத்தரவு.


பி.எட்., எம்.எட்., இரண்டு ஆண்டு படிப்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மே 30-க்குள் நிறைவேற்ற, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர குறிப்பிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன், பி.எட்., எனப்படும், இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.


ஓராண்டு பி.எட்., படிப்பாக இருந்தது, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவை (என்.சி.டி.இ.,) தொடர்ந்து 2015--16-ம், கல்வி ஆண்டு முதல் இரண்டு ஆண்டாக உயர்த்தப்பட்டது. பி.எட்., எம்.எட்., பி.பி.எட்., எம்.பி.எட்., 2 ஆண்டு படிப்புக்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கழகம் மேற்கொண்டது. பி.எட்., படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது, கற்பித்தல் பயிற்சி 40 நாட்களாக இருந்தது. 



தற்போது 20 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு, முதல் ஆண்டில் 6 வாரங்களும், 2-ம் ஆண்டில் 14 வாரங்களும், ஏதாவது ஒரு பள்ளியில் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கணினி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி பாடம் நடத்துதல், விளையாட்டு, யோகா, கலை மற்றும் கைவினை, இசை, நடனம், நாட்டியம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 


நடப்பு கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டு வகுப்பு ஆகஸ்ட்டில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், பிப்.29-ம் தேதிக்குள், கல்வியியல் கல்லுாரிகள், உடற் கல்வியியல் கல்லுாரிகள் ஆசிரியர் நியமனம் குறித்த அனுமதியை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி பல்கலையில் பெற்று அனுப்ப வேண்டும்.



 ஏற்கனவே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அதற்கான பல்கலை அனுமதியை அனுப்ப வேண்டும். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குரிய கூடுதல் கட்டட வசதி, ஆய்வகம், நுாலகம் அமைக்கப்படும் விபரங்களையும் அனுப்ப வேண்டும், என என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் நியமனம், கட்டட பணிகளை, மே 30-க்குள் முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும், எனவும் உத்தரவிட்டுள்ளது.