மதுரை: ''பேச்சுவார்த்தைக்கு கூட அரசு அழைக்காததால், திட்டமிட்டபடி, பிப்., 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடக்கும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:''புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்.
அதை நிறைவேற்றக் கோரி தான் போராடி வருகிறோம். கடந்த ஜன., 21ல் சென்னையில் முதல்வரை சந்திக்க போராடினோம். தலைமை செயலாளரை மட்டுமே சந்திக்க முடிந்தது. அவரும் முதல்வரை சந்தித்து பேச வைப்பதாக கூறியும் நடவடிக்கை இல்லை. கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு கூட அரசு அழைக்கவில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய எதிர்பார்க்கின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு பிறகு 1,890 ஊழியர்கள் இறந்து விட்டனர். 3,450 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனாலும் புதிய ஓய்வூதிய திட்ட பயன்கள் அவர்களை சேரவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் அரசு பங்களிப்பு ரூ.12 ஆயிரம் கோடி சேர்ந்துள்ளது. மாநிலத்தில் நான்கு லட்சம் காலிபணியிடங்கள் உள்ளன. ஊழியர்கள் பணிச் சுமையில் உள்ளனர்.
எனவே திட்டமிட்டபடி பிப்., 10ல் காலவரையற்ற போராட்டம் துவங்கும். அனைத்து துறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களும் பங்கேற்கின்றனர். ஆசிரியர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது, என்றார்