Breaking News

கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது; பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி


தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2014-15-ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 201 ஆசிரியர்களுக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 136 ஆசிரியர்களுக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
மேலும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் 30 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. விருதுகளை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.
முன்னதாக விழாவில் அமைச்சர் பேசியது: நாட்டின் 2-ஆவது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவை நடத்தும் முழுத் தகுதியும் தமிழக அரசுக்கு உள்ளது.
2011-ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது தமிழகத்தில் சுமார் 52 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தன. தற்போது 72,800-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் தேர்ச்சி சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 187 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அதேபோல 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1167 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த வெற்றிக்கு தமிழக முதல்வரின் முயற்சிகளே காரணம். அதுமட்டுமல்லாமல், ஆசிரியர்களின் ஈடுபாடும் இதில் அடங்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காக முதல்வர் அறிவித்த பல திட்டங்கள் உலகளவில் பாராட்டப்படுகின்றன. இலவச மடிக்கணினி வழங்கியதால், தமிழக மாணவர்கள் வளர்ந்த நாடுகளுக்கு இணையான கணினி அறிவை பெற்றுள்ளனர். 2001-ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியதும் முதல்வர்தான். இதுபோன்ற முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளால் பள்ளிக் கல்வித் துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் த. சபிதா, பள்ளிக்கல்வியில் தமிழகம் செயல்படும் விதத்தைப் பாராட்டி மத்திய அரசு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தைப் பின்பற்ற பிற மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மைதிலி கே. ராஜேந்திரன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ரா. பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ரெ. இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.