Breaking News

மாணவர் விடுதியில் 3 மாதங்களுக்கு அரசியல்வாதி பணியாற்ற வேண்டும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும் என அரசியல்வாதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சௌகார்பேட்டையில் உள்ள விதிமீறல் கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றபோது, சீனிவாசலு என்ற அரசியல்வாதி, துருவாசன், கண்ணதாசன் ஆகிய இரண்டு வழக்குரைஞர்கள் அதைத் தடுத்தனராம்.

இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான 2 வழக்குரைஞர்களும் புதிதாகப் பதிவு செய்தவர்கள். இந்தத் தொழிலுக்குப் புதிய நபர்களான தங்களை, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தவறாக வழிநடத்தியதால், நீதிமன்றக் கண்காணிப்பின் பேரில் விதிமீறல் கட்டடத்தை சீல் வைக்கச் சென்ற மாநகராட்சியின் நடவடிக்கையில் தலையிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் தாங்கள் பெரிய தவறிழைத்துள்ளதாகவும், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். வழக்குரைஞர் பணிக்குரிய நெறிகளோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். மூத்த வழக்குரைஞரான ஜி.கிருஷ்ணமூர்த்தியின் அலுவலகத்தில் இவர்கள் இருவரும் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பணியாற்றி, இந்த நெறிகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், அவர்கள் 3 மாதங்களுக்கு நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான அவமதிப்பு வழக்கு 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.

இந்த வழக்கில் மூன்றாவதாக, அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர், அரசியல்வாதியாவதற்கு முயன்று வருகிறார். ஆனால், தேர்தல்களில் இதுவரை அவரால் வெற்றிபெற முடியவில்லை. அவரும் இந்த வழக்கில் மன்னிப்பு கோரினார்.

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சமூக சேவையில் அவர் ஈடுபட விரும்புகிறாரா என்பதை அறிய விரும்பினோம். அவர் விருப்பத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

எனவே, அவர் எங்கு சமூக சேவையை செய்ய விரும்புகிறார் என்று கேட்டதற்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ரத்தின சபாபதி தெருவில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தினமும் 3 மணி நேரம் என வாரத்துக்கு 5 நாள்கள் சேவையாற்ற விரும்புவதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.

எனவே, இவரது மன்னிப்பும் ஏற்கப்படுகிறது. அவரது நடத்தையைக் கண்காணிப்பதற்காக இந்த வழக்கு விசாரணையும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.

அந்த விடுதியின் காப்பாளரிடமிருந்து மூன்று மாதங்கள் பணியாற்றியதற்கான சான்றிதழை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டடத்துக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த மேல்முறையீட்டை, நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதித் துறையின் செயலாளர் 4 வாரங்களுக்குள் விசாரித்து, அவர்களது கட்டடத்தில் எந்தப் பகுதியை இடிக்க வேண்டும், எந்தப் பகுதியை அவர்கள் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும். 

கட்டடத்தின் உரிமையாளரும் அந்தப் பகுதியை இடித்துவிட்டு, மீதமுள்ள பகுதியில் குடியேறலாம். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக அக்டோபர் 30-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிசம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.