Breaking News

"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்


முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் மேற்கொள்ள -கேட்- (பொறியியல் பட்டதாரி நுண்ணறித் தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்த்துக்கொள்கின்றன.
 இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.), ஐஐடி நிறுவனங்கள் இணைந்து இந்தத் தேர்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 1-ஆம் தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது இது அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 2016-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு 2016 ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
 இந்தத் தேர்வுக்கு இணையவழி (ஆன்-லைன்) முலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமும் இணைய வங்கிச் சேவை, கடன் அட்டை, டெபிட் கார்டு, இ-சலான் ஆகிய முறைகளில் மட்டுமே செலுத்தவேண்டும். இதுபோல், தேர்வு அனுமதிச் சீட்டையும் இணையதளத்திலிருந்தே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
 தேர்வில் இடம்பெறும் 23 தாள்களையும் இணையவழி மூலம் மட்டுமே எழுத வேண்டும். தேர்வு முடிவுகள் 2016 மார்ச் 19 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.
 மேலும் விவரங்களை http:gate.iisc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.