வங்கிகளில், மாணவர்கள் பெறும் கல்விக் கடனில், 7.50 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் தேவையில்லை' என்ற, புதிய நடைமுறையை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. தங்கள் பிள்ளைகளை, உயர் கல்வி படிக்க வைக்க வசதியில்லாத பெற்றோர், வங்கிகளில் கடன் பெற்று இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படிக்க வைக்கின்றனர்.
இவ்வாறு கடனாக பெறும் தொகையை, அந்த மாணவர்கள் வேலைக்கு சென்ற பின் திருப்பி செலுத்தினால் போதும். பல நாடுகளிலும் இது போன்ற கல்விக்கடன் திட்டங்கள் உள்ளன. சமீப காலமாக, கல்விக்கான செலவு அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், கல்விக்கடனும் அதிகரித்து வருகிறது.
ஆனால், கடன் வழங்கும் வங்கிகள் ஏராளமான நிபந்தனைகளை விதித்து, மாணவர்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றன. கடன் வழங்கும் வங்கிகள், 'வங்கிக் கடன் நடைமுறைகள் - 2012'ஐ பின்பற்றி, அதில் உள்ள அம்சங்களின் படி, கெடுபிடி நிபந்தனைகளை விதிக்கின்றன.இதனால், வங்கித்துறை மீது கண்டனங்கள் பாய்கின்றன.
இதை தவிர்க்க, இந்திய வங்கிகள் சங்கம், 'வங்கிக் கடன் நடைமுறைகள் - 2015' என்ற புதிய கொள்கைகளை உருவாக்கி உள்ளது. அந்த அமைப்பு, இதற்கான பரிந்துரைகளை வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் அளித்துள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்:
* நான்கு லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுபவர்கள், எந்த உத்தரவாதமும் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை மாற்றி, 7.50 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்கள், உத்தரவாதம் அளிக்க தேவையில்லை என மாற்றப்பட்டுள்ளது
* எனினும், அந்த கடன் தொகைக்கு, 'கிரெடிட் கேரன்டி ஸ்கீம்' என்ற கடன் உத்தரவாத காப்பீடு செய்யப்படும்
* காப்பீடுக்கான பிரிமியம் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்
* கல்விக்கடன் தொகை திருப்பி செலுத்தப்படாமல், 'வாராக்கடன்' என்ற நிலையை அடைந்தால், அதை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்று, வங்கிக்கு கடன் தொகையை அளிக்கும்
* எனவே, 7.50 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடனுக்கு, உத்தரவாதம் அளிக்க தேவையில்லை.இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
'கட் - ஆப்' மார்க் உண்டு
இதுவரை, கல்விக்கடன் பெற, கல்லுாரி சேர்க்கை அனுமதி சீட்டு மட்டும் போதுமானதாக ஏற்கப்பட்டது. வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீதம் அல்லது அதற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே, கல்விக்கடன் வழங்கப்படும்.
கடன் வழங்குவதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் வரம்பை, ஒவ்வொரு வங்கியும் தனித்தனியாக நிர்ணயிக்கலாம்.இதுவரை, படிப்பு முடிந்து, ஆறு மாதங்கள் வரை, கடனை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது.
தற்போது நிலவும் வேலையின்மை பிரச்னையை கருத்தில் கொண்டு, கடனைத் திருப்பி செலுத்த அளிக்கப்படும் அவகாசம், ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வங்கியும், கல்விக்கடன் அளிக்க, தனித்தனி விண்ணப்ப படிவங்களை வைத்திருந்தன. இனிமேல், அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான கல்விக்கடன் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
இப்போதைய நிலை இதோ:
* நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் இல்லை
* நான்கு லட்சம் ரூபாய்க்கும் மேல், பெற்றோர் மற்றும் மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; நிலம், கட்டடம், அரசு, பொதுத்துறை முதலீட்டு பத்திரங்கள், வங்கி வைப்புத் தொகை, பங்கு முதலீடு என, ஏதாவது ஒன்றை உத்தரவாதமாக காட்ட வேண்டும்
* கல்விக்கடன் தொகைக்கு, கடன் உத்தரவாத காப்பீடு இல்லை
* ஒவ்வொரு வங்கியும் தனித்தனியாக கடன் விண்ணப்பங்களை வைத்துள்ளன
* கல்லுாரி சேர்க்கை கடிதத்தை காட்டினால் மட்டுமே கடன் கிடைக்கும்
* பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படாது
* படிப்பு முடிந்து கடனை திருப்பி செலுத்த, 6 மாதங்கள் அவகாசம். அதன் பின், மாதந்தோறும் தவணைத் தொகை அடிப்படையில் திரும்ப செலுத்த வேண்டும்.