Breaking News

எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாத நல்லாசிரியர் விருது ஊக்கத்தொகை


"கடந்த எட்டு ஆண்டுகளாக நல்லாசிரியர் ஊக்கத்தொகை உயர்த்தப்படாததால், தொகையை உயர்த்தி வழங்க'' அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக ஆண்டுதோறும் கல்விப்பணியில் சிறந்து விளங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக்., மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சிறந்த கல்வி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த கல்வியாண்டில் 377 பேருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு பதக்கம், சான்று மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகை கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளதால், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே எழுந்துள்ளது.
விருது பெற்ற ஆசிரியர் ஒருவர் கூறும்போது: நல்லாசிரியர் விருது பெறும், 

ஆசிரியருக்கு 15 ஆண்டு அனுபவம், தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். 1998-ல் நல்லாசிரியர் விருது ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரமாக இருந்தது. 2007-ம் ஆண்டு இந்த தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.

விபத்தின்றி பஸ்களை இயக்கும் டிரைவர்களுக்கு ரூ.2 ஆயிரம், 10 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம், 15 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

அதே போன்று மாணவர்களை நெறிப்படுத்தி, கல்வி செயல்பாடுகளை திறம்பட செய்கின்ற ஆசிரியர்களுக்கும் பரிசுத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

மத்திய அரசு சார்பில் நல்லாசிரியர் விருது 20 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படுகிறது. ஆனால், மாநில நல்லாசிரியர் விருது அறிவிப்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்படுகிறது. இதனால், பஸ், ரயிலில் முன்பதிவு செய்ய முடிவதில்லை. வாடகை காரில் தான் செல்ல வேண்டும். தங்கும் செலவு, வாடகை கட்டணம் என ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. 

இந்த செலவினங்களை குறைக்கும் வகையில், விருது அறிவிப்பை 10 நாட்களுக்கு முன்பு அரசு அறிவிக்க வேண்டும். நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு அரசு சார்பில் எவ்வித சலுகையும் அளிக்கப்படுவதில்லை. பஸ், ரயிலில் செல்லும் போதும் அவர்களுக்கு கட்டண சலுகை அளிக்க அரசு முன் வரவேண்டும், என்றார்.