தமிழகத்தில் புதிதாக 5 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இப்போது 77 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம், 45 பொறியியல், 20 பொறியியல் அல்லாத பிரிவுகளில் 28,259 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், 3,000 மாணவர்கள் தொழில்பயிற்சி பெறும் வகையில் விடுதி வசதியுடன் கூடிய 15 புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. தொழில்பயிற்சி நிலையங்களில் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில், நடப்பாண்டில் 5 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
அதன்படி, தஞ்சை மாவட்டம்- ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம்- விராலிமலை, விருதுநகர் மாவட்டம்- சாத்தூர், பெரம்பலூர் மாவட்டம்- ஆலத்தூர், விழுப்புரம் மாவட்டம்- திண்டிவனம் ஆகிய இடங்களில், 1,000 மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய புதிய தொழில்பயிற்சி நிலையங்கள் ரூ. 45.97 கோடியில் தொடங்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.