Breaking News

இந்த வார அறிவியல்-- எளிய இயற்பியல் சோதனைகள்

I மூழ்குதல் மற்றும் மிதத்தல் - ஊகிக்கும்பயிற்சி
 
மூழ்குகின்ற அல்லது மிதக்கின்ற தன்மையுடைய சாதாரணப் பொருட்களை அதிக அளவில் சேகரித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொருட்கள் மூழ்குமா அல்லது மிதக்குமா?” என்று மாணவர்களை ஊகிக்கச் சொல்லுங்கள் பின்னர் அவர்களின் ஊகங்களை ஒரு அட்டவணையில் பதிவு செய்யுங்கள்.
பொருட்கள்
நான் நினைப்பது
நான் காண்பது
ஒரு பூ
மிதக்கும்
மிதக்கிறது
ஒரு உலோகக் கரண்டி
மூழ்கும்
மூழ்குகிறது
ஒரு பிளாஸ்டிக் கரண்டி
மூழ்கும்
மிதக்கிறது
ஒரு மரக்குச்சி
மிதக்கும்
மிதக்கிறது
ஒரு மெழுகுவர்த்தி
மூழ்கும்
மிதக்கிறது
ஒரு சாக்குத்துண்டு
மூழ்கும்
முதலில் மிதக்கிறது பின் மூழ்குகிறது
ஒரு தேங்காய்
மூழ்கும்
மிதக்கிறது

ஆசிரியருக்கான குறிப்பு: வாசிக்க சிரமப்படும் பிள்ளைகளுக்கு உதவியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பக்கத்தில் அதற்குரிய படத்தை சிறிய அளவில் வரைந்து காட்டுங்கள்
.
எந்தவொரு சோதனையைச் செய்யத் துவங்கு முன் மாணவர்களின் ஊகங்களை பதிவு செய்யுங்கள். புத்திசாலித்தனமான ஊகிக்கும் பயிற்சியே அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையாக அமைகிறது. அறிவியலை எப்பொழுதும் ஊகித்துவிட முடியாது என்பதை பிள்ளைகள் கண்டிப்பாய் புரிந்து கொள்வதுடன்,  அவை வியப்புகுரியனவாக  இருக்கின்றன என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அனைத்து விஞ்ஞானிகளும் இப்படிப்பட்ட தவறான ஊகங்களிலிருந்தே கற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள் என்பதையும் மாணவர்களை உணரச் செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கான குறிப்பு: நீங்கள் இதே போல் மற்றொரு சோதனையையும் செய்து காட்டலாம். ஒரு வாளியை உப்பு நீரால் நிரப்புங்கள். மற்றொரு வாளியை சாதாரண நீரால் நிரப்புங்கள். இதனைமாணவர்களுக்குச் சொல்ல வேண்டாம். இந்த வாளிகளில் உள்ள நீரில் மாணவர்களைஉருளைக்கிழங்கு, வேர்க்கடலை போன்றவற்றைப் போடச் சொல்லுங்கள். ஒரு வாளியில் பொருட்கள் மூழ்குவதையும் மற்றொன்றில் அவை மிதப்பதையும் அவர்கள் காண்பார்கள்.
இது ஏன்? - மாணவர்களை ஊகிக்கச் சொல்லுங்கள்.
II. குழுப் பயிற்சியில் காந்தம்
 
தேவையான பொருள்கள் (ஒவ்வொரு குழுவுக்கும்):
  • ஒரு சிறிய காந்தம்.
  • 12 ஊசிகள்
விதவிதமான அளவுகளும், வடிவங்களுமுடைய ஐந்து செட் காந்தக் கட்டிகளை வகுப்பறைக்கு கொண்டு வாருங்கள். வகுப்பை ஒவ்வொன்றிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் கொண்ட ஐந்து குழுக்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் காந்தங்களையும், ஊசிகளையும் கொடுங்கள். காந்தத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு ஊசியால் எத்தனை ஊசிகளை ஒருசேர தூக்க முடிகிறது என்பதை செய்து பார்த்துத் தெரிவிக்கச் சொல்லுங்கள்.
ஆசிரியருக்கான குறிப்பு: மாணவர்களை புதுமையாக சிந்திக்கச் சொல்லுங்கள். பெரும்பாலான பிள்ளைகள் இயல்பான வழியையே பின்பற்றுவார்கள். காந்தங்கள் ஊசிகளைச் செங்குத்தான  நிலையில் தூக்கும்படி அனுமதியுங்கள்.
காந்தத்தில் ஒட்டிய முதல்  ஊசி கிடைநிலையில் இருக்கும் பட்சத்தில் மேலும் பல ஊசிகளை அவைகளால் தொட்டுத் தூக்க முடிகிறதா?
காந்தத்தின் உருவங்களின் மாறுபட்ட அளவுகள், தூக்க முடியும் ஊசிகளின் எண்ணிக்கைகளை எந்த விதத்திலாவது பாதிப்புகளை ஏற்படுத்துமா?”         - என்பது போன்ற  வினாக்களை எழுப்புங்கள்.
இந்தச் சோதனையின் மூலமாக, பிள்ளைகள் காந்தத்தின் முக்கியமான குணங்களை நம்முடைய உதவி இல்லாமலேயே அறிந்து கொள்வார்கள். மேலும் குழுக்களாக பயிற்சி செய்வதால், ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்படுவதின் பாடத்தையும் கற்பார்கள்.
III. காற்று  வெற்றிடத்தை நிரப்புவதுடன் அழுத்தத்தையும் கொடுக்கிறது
 
மேலேயுள்ள வார்த்தைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?
நாம் கூட பல சமயங்களில் வார்த்தைகளைப் புரிந்து கொண்டதில் உறுதியாக இருந்திட முடியாது. சில அறிவியல் விதிகளை வார்த்தைகள் மூலமாக புரிந்து கொள்வது என்பது சிரமமான காரியமாகும். ஆனால் ஒருவர் அதனை செய்முறையாக விளக்கிக் காட்டும் போது அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. சில சமயங்களில் ஒரேயொரு சோதனையை விட, பல சோதனைகள் விதிகளின் கருத்துப் படிவங்களைத் தெளிவாக்குகின்றன. இங்கே காற்றைப் பற்றிய விதிகளை விளக்கும் சில சோதனைகளைப் பார்க்கலாம்.
  1. ஜாடி மற்றும் காகிதச் சோதனை
“யார் சரி?” - என்பதை சோதனை மூலம் உறுதி செய்வது தான் இதன் நோக்கம்.
தேவையான பொருட்கள் (ஒவ்வொரு குழுவுக்கும்):
  • ஒரு அகன்ற இருப்புச்சட்டி அல்லது வாளி
  • ஒரு கண்ணாடி ஜாடி அல்லது டம்ளர்
  • ஒரு துண்டு காகிதம்
பிள்ளைகளிடம் கண்ணாடி ஜாடியின் அடிப்பாகத்தில் காகிதங்களை திணிக்கச் சொல்லுங்கள்.
சோதனைக்கு முன்னதாக, “தண்ணீர் நிரப்பிய இருப்புச்சட்டியில் ஜாடியை தலைகீழாக கவிழ்த்தால், காகிதங்கள் ஈரமாகுமா? ஆகாதா?” என்பதை ஊகிக்கச் சொல்லுங்கள். அவர்களின் ஊகங்களைப் பதிவு செய்யச் சொல்லுங்கள். பிறகு, அவர்கள் சோதனை செய்து முடித்த பின், குறித்து வைத்துள்ள ஊகங்களுடன் சோதனை முடிவை ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.
“எது நீரை உள்ளே புகமுடியாமல் தடுக்கிறது ?
எதாவது குழுவின் காகிதம் ஈரமானதா?
அப்படியானல் ஏன்?
அவர்கள் ஜாடியை சாய்வாக பக்கவாட்டில் வைத்தார்களா? அல்லது காகிதம் கீழே விழுந்ததா? ஜாடியில் ஓட்டை இருந்ததா?”
-          இப்படியான வினாக்களைக் கேளுங்கள்.
ஆசிரியருக்கான குறிப்பு: கலந்துரையாடலுக்குப் பின், நீங்கள் ஜாடியை நேர் செங்குத்தாக நீருக்குள் மூழ்கச் செய்யலாம்அப்பொழுது,  நீர் ஜாடியின் உள்ளே போகுமுன் காற்றுக் குமிழிகள் மேலே வருவதை குழந்தைகள் கவனமாகப் பார்க்கட்டும்.
  1. மருந்து டிராப்பர்
மீண்டும், காற்று வெற்றிடத்தை நிரப்புகிறது என்பதை இன்னொரு சோதனை மூலம் செய்து காட்டுங்கள். இதற்கு, நீங்கள் வைட்டமின் டிராப் பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு குழுவுக்கும் தலா ஒரு நீர் நிரப்பிய பாட்டிலைக் கொடுங்கள். ஒன்றில், பாதிவரை டிராப்பரை அழுத்துங்கள். அதனால் அது மற்றொன்றை விட குறைவான காற்றை உடையதாக இருக்கட்டும். இதன் மூலம் குறைவாக காற்றை வெளியேற்றினால், அது குறைவான நீரையே உறிஞ்சும் என்பதை குழந்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கட்டும்.
ஆசிரியர்களுக்கான குறிப்பு: நீங்கள் வைட்டமின் டிராப்பர் பாட்டில்களை சேகரிப்பதில் சிரமமாக இருப்பதை உணர்ந்தால், இதே சோதனையை பவுண்டன் பேனா இங்க் ஃபில்லர்களைக் கொண்டுசெய்து காட்டலாம்.
 
  3.  தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப் படும் கிளாஸ் (அறிவியலின் மாயம்)
தேவையானப் பொருட்கள்-
  • ஒரு கிளாஸ் நீர்
  • ஒரு சிறிய அட்டைத் துண்டு
பிள்ளைகளை கிளாஸ்சின் விளிம்பு வரை நீரை நிரப்பச் சொல்லுங்கள், அதன் மேல் அட்டையை வைக்கச் சொல்லுங்கள், பின் அதனை தலைகீழாக நிறுத்தச் சொல்லுங்கள். நீர் கீழே கொட்டுவதை எதிர்பார்ப்பீர்கள்.
ஆனால் அப்படி நடக்கிறதா? ஏன்?
 4.  ஒரு மூடிய டப்பா (மேலும் மாயம்)
தேவையான பொருட்கள் (ஒவ்வொரு குழுவுக்கும்):
  • இருக்கமான மூடியை உடைய ஒரு டப்பா
  • அடிப்பகுதியில் துளைகளிட ஒரு ஆணி
  • ஒரு வாளித் தண்ணீர்
இந்த சோதனையின் மூலம் காற்றின் அழுத்தம் மேலும் நிரூபிக்கப்படுகிறது.
பால் பவுடரின் பழைய டப்பாக்களின் அடிப்பகுதியில் நான்கு துளைகளை இடுங்கள். அதனை நீரால் நிரப்புங்கள். பின் மூடியால் இறுக்கமாக மூடி விடுங்கள்.
நீர் வெளியே வந்ததா?
“வெளிக்காற்று, நீர் வெளியேறுவதிலிருந்து அதைப் பின்னுக்குத் தள்ளி தடுக்கிறது” என்ற காரணத்தைப் புரியச் செய்யுங்கள்.
 5.  குமிழிகள் (அறிவியலுடன் விளையாடுதல்)
தேவையான பொருட்கள்:
  • சில மெல்லிய கம்பிகள்
  • சோப்புக் கரைசல் (விலை உயர்ந்த தென்றாலும் ஷாம்பு இதற்கு சிறப்பானதாக இருக்கும்)
மெல்லிய கம்பிகளால் வளையங்கள் செய்யச் சொல்லுங்கள். சோப்புக் கரைசலில் வளையங்களை முக்கச் சொல்லுங்கள். வாயினால் ஊதி மெதுவாக குமிழிகளை உண்டாக்கச் சொல்லுங்கள்.
ஒவ்வொரு குமிழியிலும் காற்று நிறைந்துள்ளதை கவனிக்கச் சொல்லுங்கள்.
சில குமிழிகள் தரையில் விழுந்து உடைந்து விடும். சில குமிழிகள் அந்தரத்தில் உடைந்து விடும்.  ஏன்? இவைகளை காற்று அழுத்துகிறதா?
  1. நடனமாடும் மெழுகுவர்த்தி -  ஏன் தெரியுமா ?
தேவையானப் பொருட்கள் (ஒவ்வொரு குழுவுக்கும்)-
  • ஒரு கத்தி அல்லது பிளேடு
  • ஒரு நீளமான மெலிதான மெழுகுவர்த்தி (குறைந்தபட்சம் 10 செமீ நீளம்)
  • ஒரே உயரத்திலான இரண்டு கண்ணாடி அல்லது தகர டப்பாக்கள்
  • ஒரு ஊசி
சிறு குழந்தைகளுக்கு இந்த சோதனை பார்க்க வேடிக்கையாக இருக்கும். பெரிய குழந்தைகளுக்கு இது அவர்களின் அறிவியல் அறிவை சோதிப்பதாக இருக்கும்.
குழந்தைகளிடம் மெழுகுவர்த்தியின் அடிப்பாகத்தை கூர்மையாக்கி இரண்டு பக்க முனைகளிலும் பற்ற வைக்க  ஏதுவாக  இருக்கும்படி செய்யச் சொல்லுங்கள். மெழுகு வர்த்தியின் நடுப்பாகத்தை தங்கள் விரலில் நிற்க வைத்துக் கண்டுபிக்கச் சொல்லவும். இப்போது, மெழுகுவர்த்தியின் நடுப்பகுதியில் ஊசியை குத்திச் செலுத்தச் சொல்லுங்கள். 
ஊசியானது மெழுகுவர்த்தியின் இரண்டு பக்கமும் சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். படத்தில் காட்டியபடி இரண்டு கிளாஸ்களுக்கு மத்தியில் அதனை நிறுத்த அவர்களுக்கு உதவுங்கள் மற்றும் மெழுகுவர்த்தியின் இரண்டு முனைகளிலும் நெருப்பைப் பற்றவையுங்கள்
சரியாக நடுப்பகுதியில் மெழுகுவர்த்தியை நிறுத்தி விட்டால், மெழுகுவர்த்தியானது, மேலும் - கீழும் ஆடும் விளையாட்டுப் பலகை போல் ஆடத் துவங்கி விடும்.  
“இது ஏன்? இது காற்றின் வேலையா? மேலேயுள்ள காற்று உஷ்ணமாகி விட்டதால், கீழேயிருந்து காற்று வருகிறது தான் காரணமா ?” - போன்ற வினாக்களை எழுப்புங்கள்.
கொஞ்ச நேரத்தில், “இரண்டு பக்கமும் எரிந்து கொண்டிருக்கும் மெழுகு உருகி வழிந்து விழும் காரணத்தினால் அது இப்படி ஆடிக் கொண்டிருக்கிறது” என்பதை குழந்தைகள் ஊகித்து விடுவார்கள். இதன் காரணமாகத்தான் அது மேலும் கீழும் உயர்ந்து-சாய்ந்து ஆடுகிறது என்பதை குழந்தைகள் அறிவார்கள்
எல்லாவற்றைப் பற்றியும் - அவைகள் கண்கூடாகத் தெரிபவைகளானாலும், நன்கு நிலைநாட்டப்பட்ட விதிகளானாலும் - வினாக்களைக் கேட்கும் உரிமையைக்  குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களே வினாக்கள் கேட்கவும், கற்றுக் கொள்ளவும் அவர்களாகவே விடைகளைக் கண்டறியவும் அனுமதியுங்கள்