Breaking News

காஸ் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் இல்லை: வங்கி கணக்கு எண் போதும்

சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. வங்கி கணக்கு எண்ணை சமர்ப்பித்தாலே போதும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தும் மத்திய அரசின் திட்டம் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.


இதற்காக, காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், நுகர்வோரிடம் இருந்து வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை கொண்ட விண்ணப்ப படிவங்களை பெற்று வருகின்றன. இது குறித்து, மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதன் விளக்கமளித்து பேசியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமில்லை.

ஆதார் அட்டை பெறாத நுகர்வோர், அவர் களது வங்கி கணக்கு எண்ணை மட்டுமே கொண்டு விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை உள்ளவர்கள் ஆதார் எண்ணை தரலாம். திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு சிலிண்டருக்கான மானியம் தனித்தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து முதல் 3 மாதங்கள் நுகர்வோருக்கு கால அவகாசம் தரப்படும். இதில், வங்கி கணக்கு எண்ணை இணைத்தவர்களுக்கு காஸ் மானியம் நேரடியாக அவர்களது வங்கி கணக் கில் செலுத்தப்படும். 3 மாத கால அவகாசத்திலும் திட்டத்தில் இணையாதவர்களுக்காக கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் தரப்படும். இந்த 3 மாதத் தில் நுகர்வோர், சந்தை விலைக்கே சிலிண்டரை வாங்க வேண்டும். அவர்களுக்கான மானியம், நிலுவையில் வைக்கப்படும். இந்த நிலுவை மானியத் தொகையை, திட்டத்தில் இணைந்ததும் மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவேளை இந்த 3 மாதத்திலும் திட்டத்தில் இணையாமல் தவறவிட்டால், நிலுவை மானியத் தொகை வழங்கப்படமாட்டாது. இது நேரடியாக அரசு கருவூலத்துக்கு சென்று விடும். மேலும், தொடர்ந்து சந்தை விலைக்கே சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படும். எப்போது அவர்கள் திட்டத்தில் இணைகிறார்களோ அதன் பிறகிலிருந்தே அவர்கள் வாங்கும் சிலிண்டர்களுக்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தர்மேந்திரா பிரதன் தெரிவித்துள்ளார்.