Breaking News

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதற்காக சட்டத்தை தமிழக அரசு இயற்றவேண்டும் என்று தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

மத்திய அரசுக்குஇணையான ஊதியம்
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமான ரூ.5,200ஐ ரூ.9,300 ஆக மாற்றித்தரவேண்டும். தர ஊதியம் ரூ.2,800-ல் இருந்து ரூ.4ஆயிரத்து 200 ஆக உயர்த்தி தரவேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில் குழப்பம்
* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பலர் ஓய்வு பெற்றும் பலர் இறந்தும் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு தொகை முறைப்படுத்தி வழங்கப்படவில்லை.
எனவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதியில் ஏற்படும் குழப்பங்களை நீக்கும் வகையில் தமிழக அரசு தணிக்கை செய்து மத்திய கணக்காயத்திற்கு (ஜி.பி.எப்.) மாற்றப்படவேண்டும்.
* ஒவ்வொரு ஆசிரியருக்கும் வைப்பு நிதி கணக்கை சரி செய்து அவர்கள் தற்போது பணியாற்றும் இடத்தில் வழங்கி உரிய ஆணை வழங்கவேண்டும்.
பணிபாதுகாப்பு
* வகுப்பறையில் ஆசிரியர்கள் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும், வகுப்பறை வன்முறை களமாக மாற்றப்படுவதை தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்றவேண்டும்.
முறைப்படுத்த வேண்டும்
* ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இருந்து நகராட்சி நிர்வாக பள்ளிகளுக்கும், நகராட்சி பள்ளிகளில் இருந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெறுகிறார்கள். அவர்களுக்கு 2 விதமான வருங்கால வைப்பு நிதி உள்ளது. அவற்றை முறைப்படுத்தி ஆசிரியர்கள் பணிபுரிகின்ற பணிநிலையில் வருங்கால வைப்புநிதியையும் கணக்கையும் முறைப்படுத்தி பள்ளியில் வழங்கவேண்டும்.
* இந்த கோரிக்கை உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபயணம் சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனுகொடுக்க உள்ளோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன