Breaking News

வெள்ளை, மஞ்சள் அட்டைகாரர்கள் இணையதளத்தில் புதுப்பிக்கலாம்: ரேஷன் அட்டைகளில் உள்தாள் இணைக்க காலக்கெடு கிடையாது தமிழக அரசு அறிவிப்பு


வெள்ளை, மஞ்சள் அட்டைகாரர்கள் இணையதளத்தில் புதுப்பிக்கலாம்: ரேஷன் அட்டைகளில் உள்தாள் இணைக்க காலக்கெடு கிடையாது தமிழக அரசு அறிவிப்பு

 ரேஷன் அட்டைகளில் உள்தாள் இணைப்பதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆய்வுக் கூட்டம்


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ரேஷன் அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணி முன்னேற்றம் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தற்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2015–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதியில் இருந்து டிசம்பர் 31–ந் தேதிவரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் 15.12.14 முதல் நடைபெற்று வரும் உள்தாள்கள் ஒட்டும் பணி, இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

காலக்கெடு இல்லை


22–ந் தேதிவரை ஒரு கோடியே 42 லட்சத்து 93 ஆயிரத்து 355 அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி 72 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களின் வசதிக்காக வழங்கீட்டு கூறு முறையில் உள்தாள்கள் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் அங்காடிகளுக்கு சென்று உள்தாள்களை பெற்றுக்கொள்ளலாம்.

தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நாட்களில் செல்ல இயலாதவர்கள் அந்த வாரத்தின் சனிக்கிழமையில் அங்காடிகளில் உள்தாள்களை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் அட்டையில் உள்தாளை இணைத்து பெறுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மீதமுள்ள ரேஷன் அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணியை துரிதப்படுத்தி, பொது மக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி, விரைந்து முடிப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டது.

இணையதளத்தில்


வெள்ளை நிறமுடைய எப்பொருளும் வேண்டாம் என்ற ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் முகவரி ஆதாரத்திற்காக வழங்கப்படும் மஞ்சள் நிறமுடைய தக்கல் ரேஷன் அட்டைதாரர்கள் அவர்களுடைய ‘‘என்’’ ரேஷன் அட்டைகளை www.consumer.tn.gov.in என்ற இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதி 31.3.15 வரை செயல்பாட்டில் இருக்கும்.

இணையதளத்தில் ரேஷன் அட்டையை புதுப்பித்துக் கொள்ள இயலாத வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய எப்பொருளும் வேண்டாத ரேஷன் அட்டைதாரர்கள், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்களில் அவர்களுடைய ரேஷன்அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

குறைதீர் முகாம்கள்


ரேஷன் அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்றால் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ–மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம். அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ–மெயில் முகவரிகள் இத்துறையின் மேற்கூறப்பட்ட இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம் மற்றும் ரேஷன் அட்டைத் தாரர்களின் குறைபாடுகளைக் களைவதற்கான குறைதீர் முகாம்கள், சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும் 2–ம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.

போலி அட்டைகள் ரத்து


இந்த முகாம்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் ரேஷன் அட்டை கோரும் மனுக்கள், அட்டைகளின் நகல் கோருதல், ரேஷன் அட்டைகளில் உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், எரிவாயு இணைப்புகள் மற்றும் இவை தொடர்பான திருத்தங்கள் குறித்த மனுக்கள் பிற்பகல் வரை பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பிறகு அன்று மாலைக்குள் அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது.

கடந்த 2011 ஜூன் முதல் 13.12.14 வரையில் இம்முகாம்களில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 70 மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வகை குறைதீர் முகாம்களை நடத்தும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான். தமிழ்நாட்டில் 1.6.11 முதல் 30.11.14 வரை 11 லட்சத்து 14 ஆயிரத்து 761 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 3 லட்சத்து 38 ஆயிரத்து 984 போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கைது நடவடிக்கை


எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருள்களும், உரிய தரத்துடன் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட வேண்டுமென்று இந்தக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அத்தியாவசியப் பொருள்களின் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்று வரை 21 ஆயிரத்து 66 நபர்கள் கைது செய்யப்பட்டு அவற்றில் 616 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள்


இந்த கூட்டத்தில் அரசு உணவுத்துறை முதன்மை செயலாளர் முகம்மது நசீமுத்தின், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் எம்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ரா.கிர்லோஷ்குமார், உணவுப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.