எரிபொருள் இல்லாமல் இயங்கும் என்ஜின் தொழில்நுட்பத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவர் ஏழுமலை கண்டறிந்துள்ளார். இதற்கு செயல்வடிவம் கொடுக்க உதவ வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கொதிக்கும் எண்ணெயில் பட்டதும் அதிவேகமாக நீராவியாக விரிவடையும் தண்ணீரின் ஆற்றலைக் கொண்டு இயங்கும் வகையில் இந்த என்ஜினுக்கான செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் இந்தச் செயல் நடைபெற்று என்ஜின் தொடர்ந்து இயங்கும் என்பதால் சிறிதளவு எண்ணெய், தண்ணீரைக் கொண்டு இந்த என்ஜினை இயக்க முடியும்.
இதனால் பெட்ரோல், டீசல் போன்ற மரபு சார்ந்த எரிபொருள்கள், இதர எரிபொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும்.
இந்த என்ஜின் மூலம் அனைத்து விதமான வாகனங்களையும் இயக்க முடியும். இந்த என்ஜின் இயங்கும்போது கார்பன்-டை-ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் வெளியேற வாய்ப்பில்லை. எனவே இது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.
இந்த நீராவி என்ஜின் தொழில்நுட்பத்தை நடைமுறைப் பயன்பாட்டுக்கு ஏற்ற விதத்தில் செம்மைபடுத்துவதற்கும், முழுமையான இயந்திரத்தைத் தயாரிப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகளின் உதவி தேவை.
எனவே எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு இந்தக் கண்டுபிடிப்புக்கு உதவ வேண்டும். மேலும் கண்டுபிடிப்பு குறித்த விவரங்களை www.nopetrol.in என்ற இணையதளத்தில் காணலாம் என்றார்