கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி செய்தனர்.
எனது மகன்தான் கேலி செய்ததாகக் கருதி அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மாற்றுச் சான்றிதழ் அளித்து பள்ளியைவிட்டு வெளியேற்றினர். செய்யாத தவறுக்கு மன்னிப்புக்கோரியும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரது கல்வி பாதிக்கப்படும். சான்றிதழில் நன்னடத்தை திருப்தியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் பள்ளியில் சேர்த்து தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஜெ.ஜெயக்குமாரன் ஆஜரானார்.
நீதிபதி:
பள்ளியை விட்டு பாதியில் நீக்கினால் மாணவனுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் எந்த ஒரு பள்ளியிலும் கல்வியாண்டு இடையில் அதுவும் பிளஸ் 2 மாணவனை அனுமதிக்க மாட்டார்கள். எதிர்காலம் கருதி அரையாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மனுதாரர் மகன் பிளஸ் 2 முழுக்கல்வியாண்டையும் பூர்த்தி செய்யும்வரை தலைமை ஆசிரியர் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது. மாற்றுச்சான்றிதழ் வழங்கிவிட்டதால் அனுமதிக்க முடியாது என்ற தொழில்நுட்பக் காரணங்களை கூறக்கூடாது. மாணவனிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் வாங்கி, அனுமதிக்க வேண்டும் என்றார்