Breaking News

டிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்: பிரதமர் மோடி எச்சரிக்கை


ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும் கறுப்பு பணத்திற்கு எதிரான போர் தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலையுடன் கூடிய நினைவிடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மூலமாக இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார மாற்றம் வரும்.
நாட்டு மக்களின் நம்பிக்கை வீண்போகாது.
நேர்மையற்றவர்களே, நீங்கள் 125 கோடி மக்களின் மனநிலையை குறைத்து மதிப்பிடாதீர்கள். அரசின் நடவடிக்கையால் நீங்கள் பயப்பட வேண்டி வரும். வலிமைமிக்க இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வருவோம். நவம்பர் 8-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் உலகின் முன்ணனி நாடாக இந்தியா இருக்கும்.
ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும் இந்த கறுப்பு பண போர் தொடரும். ரொக்கமற்ற பண பரிவர்த்தனைக்கு மாறுவது அவசியம். டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். நேர்மையானவர்கள் சந்தித்து வரும் இக்கட்டான பாதிப்புகள் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.