Breaking News

புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை



Posted: 14 Sep 2016 05:44 PM PDT
சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


உள்ளாட்சித் தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சட்டசபைத் தேர்தல் வாக்காளர்கள் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் மூலமே சேர்க்க முடியும்.
அவற்றிற்கு கால அவகாசம் இல்லாததால் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர், திருத்தம், முகவரி மாற்றம் மட்டும் மேற்கொள்ள முடியும் வாய்ப்புள்ளது. ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி செப்., 1 முதல் செப்., 30 வரை நடக்கிறது. இதில் பெயர் சேர்க்க 2017 ஜன., 1 ல் 18 வயது நிரம்பினால் போதும். உள்ளாட்சித் தேர்தலில், ஏற்கனவே 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே வாக்கு அளிக்க முடியும். இதனால் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களை வயது அடிப்படையில் பிரித்து சேர்ப்பதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மேலும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து பெயர் சேர்த்தலுக்கு காலஅவகாசமும் இல்லை. இதனால் சட்டசபைத் தேர்தலில் பெயர் இருந்து உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் சரிசெய்ய வாய்ப்பு தரப்படும். அதேபோல் திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம். வேட்பாளர்களாக இருந்தால் பெயர் சேர்க்கப்படும், என்றார்.