Breaking News

10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பு: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்.


பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 அரசு தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள்குறித்து மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித் துறை 
கணக்கெடுத்து வருகிறது.தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 10,11,919 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 9,47,335 பேர் தேர்ச்சி பெற்றனர்.பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் 8,33,682 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7,61,725 பேர் தேர்ச்சி பெற்றனர்.தற்போது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி வாரியாகவும், பாடம் வாரியாகவும் மாவட்ட கல்வித் துறை கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள், பாடங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இந்த அறிக்கை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து குறிப்பிட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், பாட ஆசிரி யரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தேர்ச்சி சதவீதம் மிகக் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது உட் பட பல்வேறு கடுமையான நடவடிக் கைகளை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.