Breaking News

விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவமற்ற ஆசிரியர்கள்? - வலுக்கிறது எதிர்ப்பு


கோவை, நீலகிரி மாவட்டங்களில் பிளஸ்2 விடைத்தாள் பணி ஒதுக்கீட்டில், அனுபவமிக்க அரசு பள்ளி ஆசிரியர்கள் 
புறக்கணிக்கப்பட்டு, அனுபவமில்லாத தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை அதிகாரிகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளது.


இம்மாணவர்களின் விடைத்தாள்கள், மார்ச் 14ம் தேதி முதல்மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீட்டு பணிகளில், 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள ஆசிரியர்களை மட்டுமே, சி.இ., ஹெச். ஓ., ஆகிய கண்காணிப்பு பொறுப்புகளை வழங்கவேண்டும். ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் தனியார் பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.ஆனால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் அனுபவமில்லா, ஆசிரியர்களுக்கு தலைமை கண்காணிப்பு பொறுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, வேதியியல், இயற்பியல், தாவரவியல் உள்ளிட்ட மதிப்பீடுகளில் இந்நிலை உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.மத்திய மாநில அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தேர்வு சமயங்களிலேயே அனுபவமில்லாத ஆசிரியர்களுக்கு தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டு, அனுபவமிக்கவர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமித்தனர்.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை. விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் இதே நிலை உள்ளது. அனுபவமில்லா ஆசிரியர்களுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், பிழைகள் மற்றும் முறைகேடுகள் ஏற்படவும் வழிவகுக்கும்,' என்றார்.