Breaking News

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கூடுதல் வசதி :அதிகாரிகள் தகவல்


மானாமதுரை:'வரும் சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நேரம்,தேதி பதிவு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தேர்தலுக்கு தேவையான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கு இந்தாண்டு புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 2006ம் ஆண்டிற்கு பிறகு தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த இயந்திரங்களில் 'டிஸ்பிளே'யில் இரட்டை விளக்கு எரியும் வகையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணிக்கை தெளிவாக தெரியும். வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேட்டரி காலம் ஐந்து ஆண்டு. தற்போது பயன்படுத்தப்பட உள்ள இயந்திரங்களின் பேட்டரி ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் வாக்குப்பதிவின் போது வாக்காளர் பதிவு செய்யும் நேரம்,தேதி ஆகியவையும் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாக்குப்பதிவு நேரத்திற்கு முன்னதாகவோ,பின்னதாகவோ வாக்கை பதிவு செய்ய முடியாது.அதிகாரிகள் கூறுகையில்: 'தேர்தலில் முறைகேடுகளை தடுக்க பெருமளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏஜன்ட்கள் முன்னிலையில் நேரம், சின்னம்,வேட்பாளரின் படம் பொருத்த ஏற்பாடு செய்யப்படும். வாக்கு பதிவு நேரமான காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்யும் போது தானாகவே நேரமும் பதிவாகி விடும்.5 மணிக்கு மேல் பதிவு செய்தால் எளிதாக கண்டுபிடித்து
வாக்குப்பதிவு மைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைத்துள்ளோம்',என்றார்