Breaking News

ஆங்கிலம் முதல்தாள் தேர்வு பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி நாங்கள் 'லக்கி'


திண்டுக்கல்:'பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதனால் நாங்கள் 'லக்கி' என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:* யு.மில்டன் (டட்லி மேல்நிலைப்பள்ளி): ஆங்கிலம் முதல்தாளில் இலக்கணம் கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். மாறாக எளிமையான வினாக்கள் அமைந்திருந்தது. 'புக் பேக்'கில் இருந்து கேட்கப்பட்ட பல மாதிரி வினாக்களுக்கு இணையான வினாக்கள் தேர்வில் இடம் பெற்றிருந்தன. அதனால் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கட்டுரை வினாக்களும், எளிமையாக இருந்ததால் உற்சாகத்துடன் உள்ளோம்.


* எஸ்.முருகம்மாள் (அரசு மேல்நிலைப்பள்ளி, கே.புதுக்கோட்டை): எதிர்பார்ப்புக்கு மாறாக இலக்கணப்பகுதியில் எளிதாக கேட்கப்பட்டது மகிழ்ச்சியே. பொருள் தருக, எதிர்ச்சொல் தருக, கட்டுரை எழுதுதல், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக அமைந்திருந்ததால் விடை அளிப்பதில் சிரமங்கள் குறைந்தன. இதனால் ஆங்கில முதல்தாளில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறுவது சாத்தியமாகியுள்ளது. அதனால் நாங்கள் லக்கி 'ஸ்டூடன்ஸ்'தான்.

* என்.அசாருதீன் (செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி): 80 சதவீத வினாக்கள் பாடங்களிலிருந்து வேறுபட்டு இருந்தாலும் எளிமையாக விடையளிக்கும் வண்ணம் இருந்தன. குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாக்கள் ரெம்பவே சுலபமாக, விடையளிக்க கொஞ்சமும் சிரமமில்லாமல் இருந்தன. மாதிரி தேர்வுகளில் படித்த வினாக்கள் தேர்வில் அமைந்ததால் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி.

* எஸ்.அர்ச்சனா (புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி): 'புக் பேக்'கில் வந்த மாதிரி வினாக்கள் தேர்வில் வந்தது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இலக்கணம், கட்டுரை, வார்த்தை அறிவு பகுதியில் எளிதான வினாக்கள் வந்திருந்தன. பெரும் பாலோர் ஆங்கிலத்தில் 90 சதவீதத்திற்கு மேல் எடுப்பர் என நம்பலாம்.

* பி.லாவண்யா (ஆங்கில ஆசிரியை, எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி): 'புளூ பிரின்ட்' அடிப்படையில்'புக் பேக்'கில் கேட்கப்பட்ட வினாக்கள் 76 சதவீதம் இடம்பெற்றிருந்தன. இலக்கணப்பகுதியில் ஒருமதிப்பெண் வினாக்கள் எளிமையாக அமைந்திருந்தன. மேலும் வினாத்தாளில் குளறுபடியோ, கடினத்தன்மையோ இல்லை. கட்டுரை, பத்தி வினாக்கள் பகுதி மாணவர்களுக்கு புரியும்படி அமைந்திருந்ததால் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது, என்றார்