தமிழகம் முழுவதும் 1,078 எஸ்ஐகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு இன்று காலை தொடங்குகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒன்றரை மாதம் வரை நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக காவல் துறையில் 984 எஸ்ஐ (சார்பு ஆய்வாளர்) காலி பணியிடங்கள் மேலும் பின்னடைவு காலிபணியிடங்கள் 94 என 1,078 எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மே 23ம் ேததி நடந்தது.
காவல்துறைக்கான 20 சதவீத ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு மறுநாள் நடந்தது. இந்த தேர்வுகள் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலை நகரங்களில் 114 மையங்களில் நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வாக உடல் தகுதி தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் நடந்தது. மார்பளவு, உயர அளவு, 1500 மீட்டர் ஓட்டப் பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து வகை போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று காலை முதல் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இவைகள் அனைத்தும் எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. நேர்முக தேர்வு அனைவருக்கும் ஒரே நாளில் நடத்தப்படவில்லை. மாறாக தனித்தனியாக நடைபெற உள்ளது.
யார் எந்த தேதியில் நேர்முக தேர்வுக்கு வர வேண்டும் என ஏற்கனவே போட்டியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு நேர்முக தேர்வு தொடங்குகிறது.ஒன்றரை மாதம் வரை இந்த தேர்வு நடைபெறும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேர்முக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.