Breaking News

மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் ரகளை ஜாதி பெயரை கூறி தலைமை ஆசிரியை திட்டினாரா?

கோவையில், ஜாதி பெயரை கூறி ஆசிரியை திட்டினார் என்று கருதி மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு நாற்காலி, மேஜைகளை அடித்து உதைத்தனர். கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 626 மாணவ, மாணவிகளும், சுமார் 30 ஆசிரியர்களும் உள்ளனர். கடந்த மாதம் 18ம் தேதி ஒரு ஆசிரியை பிளஸ் 2 மாணவர் ஒருவரிடம், கீழ் ஜாதி மாணவர்களிடம் சேரக்கூடாது எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆசிரியையை கண்டித்தும், தலைமை ஆசிரியை தரக்குறைவாக திட்டுவதாக கூறியும் பிளஸ் 2 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பின்னர், மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர்.
இப்பிரச்னை குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியை கடந்த ஒரு மாதமாக மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில், தலைமை ஆசிரியை நேற்று காலை 11.30 மணியளவில் பள்ளிக்கு வந்தார். அப்போது, 12ம் வகுப்பிற்கான அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு அறையையும் தலைமை ஆசிரியை பார்வையிட்டு கொண்டிருந்தார். இதனை கண்ட சில மாணவர்கள் ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். வாக்குவாதம் முற்றவே, மாணவர்கள் தேர்வறையில் இருந்த நாற்காலி, மேஜையை தூக்கி வீசியுள்ளனர்.
அச்சமடைந்த தலைமை ஆசிரியை, தேர்வு அறை கண்காணிப்பாளர் அங்கிருந்து தப்பிவிட்டனர். இத்தகவல் மற்ற மாணவர்களிடையே பரவவே, தேர்வை புறக்கணித்து அறையை விட்டு வெளியே வந்தனர். சுமார் 40 மாணவர்கள் ஒன்று திரண்டு வகுப்பறைகளில் உள்ள நாற்காலி, மேஜைகள சூறையாடினர். ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இதை கண்ட மாணவ, மாணவிகள் அலறியடித்து வெளியே ஓடினர். உயிருக்கு பயந்த ஆசிரியர்களும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். சுவற்றில் பொருத்தியிருந்த தீயணைப்பு கருவியையும் கீழே போட்டு உடைத்தனர். அதிலிருந்து காஸ் வெளியேறியதால், மாணவிகள் 3 பேர் மயங்கி விழுந்தனர். மாணவர்களின் இச்செயலால் பள்ளியே சுமார் 30 நிமிடத்துக்கும்மேலாக போர்க்களம்போல் காட்சி அளித்தது. தகவலறிந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வந்தனர். பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவர்களை போலீசார் விரட்டினர். அதன்பிறகு, பள்ளியைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.