Breaking News

6,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க தேசிய மருந்தியல் விழா, மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:

அரசுப் பணிகளில் செம்மையோடும், சேவை மனப்பான்மையோடும் பணியாற்றக் கூடிய துறை சுகாதாரத் துறைதான். எனவே, மருந்தாளுநர்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது.

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ, கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.3,888 கோடியை விட தற்போது ரூ.7,005 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 770 நடமாடும் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு அதில், மருந்தாளுநர்களுக்கு பணி வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மருத்துவப் பணியாளருக்கான தேர்வு வாரியம் அமைத்து அதன் மூலம் 4 ஆயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2,170 மருத்துவர்களும், 1,727 சிறப்பு மருத்துவர்களும் நியமிக்கப்படவுள்ளனர். தமிழகம் முழுவதும் விரைவில் 6 ஆயிரம் செவிலியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5.50 லட்சம் பேர் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாக 80 ஆயிரம் பேரும், 2 ஆயிரம் தாய்மார்கள் பிரசவத்துக்காகவும் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். எனவே, மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மருந்தாளுநர்கள் மக்களிடம் எப்போதும் கருணையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.