Breaking News

10-ஆம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை???- அரசு ஆய்வு

அடுத்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழக அரசின் மதிப்பீடு, செயல்முறை ஆராய்ச்சித் துறைக்கு, இது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது.

இந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.

மூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்கு மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

2014-15-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பிலும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை பின்பற்றப்படுவதால், 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையே தொடர வேண்டும் என ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையைத் தொடர பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது.

இந்த நிலையில், 10-ஆம் வகுப்பில் வரும் கல்வியாண்டில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாநில அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் கீழ் உள்ள மதிப்பீடு, செயல்முறை ஆராய்ச்சித் துறை இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.