Breaking News

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை!


பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆறு ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்திட வேண்டி பல்வேறு வடிவில் கோரிக்கைகளை முன்வைத்து காத்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, இந்த சட்டசபை கூட்டத்தொடரின் கல்விமாணிய
கோரிக்கை தினத்தில் கல்வி அமைச்சரின் அறிவிப்புகள் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது, வேதனைஅளிக்கிறது.

தற்போதைய முதல்வரிடம் பணிநிரந்தரம் கேட்டு நேரில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மே 2-ல் நடந்த கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி இயக்குநர், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்டஇயக்குநர் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டத்திலும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டது. அன்றைய தின கலந்துரையாடல் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணிமாறுதலும் மட்டுமே அரசால் தற்போது வழங்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். கல்விஅமைச்சர் சொன்னபடி எதுவும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. பணிநிரந்தரம் செய்யக்கேட்டால் நிதி இல்லை என்று அரசும், அமைச்சரும் சொல்லி நீதி இல்லாமல் நடந்து வருவது படித்துவிட்டு நிரந்தரஅரசு வேலைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
நிதிநிலைக்கேற்ப பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என கல்வி அமைச்சரின் பேட்டியாக ஒருநாள் செய்தி வெளியாகிறது. பிறகு ஒருநாள் ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும் என  கல்வி அமைச்சரின் பேட்டியாக செய்தி வெளியாகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சரின் பேட்டியாக ஒருநாள் செய்தி வெளியாகிறது. ஏழாவது ஊதியக் கமிஷன் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜீன் 15-ல் சட்டசபையில் புவனகிரி சட்டமன்ற (திமுக) உறுப்பினர் சரவணன் கல்வி மானிய கோரிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரியபோது கூட கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாக பத்திரிகை செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், எதுவும் நடந்தபாடில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிமித்தமாக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும்.
அமரர் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களை இன்றுவரை தொகுப்பூதிய நிலையில் இருந்து மாற்றாமல் அரசு மவுனம் காத்துவருவது பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
ஏப்ரல் 2014-ல் ஒருமுறை ரூ.2000 ஊதிய உயர்வைத் தவிர ஆண்டு வாரியாக இப்போதுவரை ஊதியம் உயர்த்தி வழங்கவில்லை. ஆறு ஆண்டுகளாக மே மாதங்களின் ஊதியமான ரூ.62 கோடியே 88 இலட்சத்து 62 ஆயிரத்தை வழங்காமல் 16,549 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. மே மாதம் ஊதியம் இல்லாமல் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்ப வாழ்க்கையை எப்படி சமாளிப்பது என அரசு கவனம் செலுத்தி, இனியாவது ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் சேர வேண்டிய மே-மாத நிலுவைத்தொகையான ரூ.38ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசுப்பணி என நம்பிபணியில் சேர்ந்தவர்களில் இறந்தவர்களுக்கு இந்த அரசு இதுவரை எதுவும் வழங்கவில்லை. 58 வயதை பூர்த்திசெய்து பணி ஓய்வுபெற்றவர்களுக்கும் இந்தஅரசு இதுவரை எதுவும் வழங்கவில்லை. எனவே, அரசு முதலமைச்சர் நிவாரணநிதியில் இருந்து அவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சநிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
ஜாக்டோ போராட்டங்களின்போது அரசுப்பள்ளிகளை இயக்கமுழுமையாக பயன்படுத்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
இந்த ஆறு ஆண்டுகளில் பகுதிநேரமாக பணிபுரிந்த உடற்கல்வி, ஓவிய, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி பாட ஆசிரியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டிருந்தால் இந்நேரம் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் முறையை அரசு ஒழித்திருக்கலாம். ஆனால், அரசு நிரந்தரப் பணியிடங்களையும் நிரப்பாமல், பகுதிநேர ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்யாமலும் காலம்கடத்துவது சரியான நடைமுறையல்ல.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது