வெள்ளம் பாதித்த தமிழக பகுதிகளில் சிறப்புக் கடனுதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.SBI Life மற்றும் SBI General Insurance ஆகிய தனது காப்பீட்டுப் பிரிவுகளில் எடுக்கப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு கேட்பவர்களுக்கு விரைந்து பணப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வங்கியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வீடு, வாகனப் பழுதுகளுக்காக தங்க அடமானக் கடன், சம்பள முன்பணக் கடன் ஆகிய சிறப்புக் கடன்கள் விரைவாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்பிஐ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதுபோன்ற வங்கிச் சேவைகள் தவிர்த்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கியின் சார்பில் உணவு, குடிநீர், போர்வைகள், மருந்துகள் வழங்கும் நிவாரணப் பணிகளிலும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.