Breaking News

விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம்


1–வது முதல் 9–வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன. விலை இல்லா பாடப்புத்தகங்கள் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை உள்ள 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு முதல் பருவம், 2–வது பருவம், 3–வது பருவம் என்று 3 பருவங்களாக கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மாணவர்களின் புத்தக சுமை குறைந்து விடுகிறது. மாணவ–மாணவிகளுக்கு 2–வது பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக 33நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக 2–வது பருவத்திற்கு உரிய பாடங்களை ஆசிரியர்களால் நடத்த முடியவில்லை.


ஜனவரி 2–ந்தேதி

இந்த நிலையில் ஜனவரி 2–ந்தேதி விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

எனவே மாணவ–மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த அன்றே 3–வது பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 31–ந்தேதிக்குள் புத்தகங்களை குடோன்களில் இருந்து எடுக்கும்படி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.