ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு
நாடு முழுவதும் அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என மீண்டும் தீர்ப்பளித்ததுடன், ‘ஆதார் எண் கட்டாயம் அல்ல’ என்ற தகவலை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்த குழப்பம் காரணமாக, சிலர் ஆதார் பெறுவதற்கான முயற்சியையே கைவிட்டனர்.
இந்நிலையில், காஞ்சிமாவட்ட கருவூலம் சார்பில் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பாக கோப்புகளை வழங்கும்போது, ஆதார் எண்ணும் கட்டாயம் இணைத்து வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கருவூலங்களிலும் ‘ஆதார் எண்ணை இந்த மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாத ஊதியம் வழங்கப்படாது’ என அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளன.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘ஆதார் அட்டை கட்டாயமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியதால், பல அரசு ஊழியர்கள் ஆதார் அட்டையை வாங்குவதற்கான முயற்சியை இதுவரை எடுக்காமலே இருந்தோம். ஆனால், இப்போது ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என கருவூல நிர்வாகம் கூறுகிறது. கனமழையின் காரணமாக இரவு பகல் பரமால் பணி செய்தோம். இதனால் ஆதார் எடுக்க முடியவில்லை. கூடுதல் அவகாசம் கொடுத்தல் ஆதார் அட்டையை வழங்குவோம். ஒரு சிலர் ஆதார் எண் தரவில்லை என்றாலும், தந்தவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படமாட்டது என்று கூறுவது ஏற்புடையாத இல்லை என்றனர்.
சம்பளம் கிடைக்குமா?
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19ம் தேதிக்குள் கருவூலத் துறையிடம் வழங்கப்படும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால், அதை இந்த மாதத்துக்குள் (டிசம்பர்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், டிசம்பர் 31ம் தேதி சம்பளம் கிடைக்குமா என தெரியவில்லை. ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.