Breaking News

கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.



ஆனாலும், அவற்றை சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லாத சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில், மேற்கண்ட பள்ளிகளில் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை நியமிப்பதற்கான, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தினக்கூலி அடிப்படையில், மாதத்துக்கு, 22 நாள் மிகாமலும், ஆண்டுக்கு, 10 மாதத்துக்கு மிகாமலும், பணியாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 



இதன் அடிப்படையில், பள்ளியின் தேவைக்கேற்ப, பகுதி நேரம், முழு நேரம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, தேவைப்படும் துப்புரவு சாதனங்கள் உள்ளிட்ட விவரங்களை, பள்ளியிலிருந்து சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்களின் ஊதியமாக ஆண்டுக்கு, 39.79 கோடி ரூபாயும், துப்புரவு சாதனங்களுக்கு, 17.84 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து தலைமை ஆசிரியர்களும், இந்த விவரங்களை படிவங்களில் நிரப்பி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில், ஓரிரு நாளில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.