சென்னை:'எல் நினோ என்ற வெப்பத் தாக்கத்தால் பசிபிக் கடலில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடும் வெப்பம் நிலவியது. இதனால் சில நாடுகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை கடும் மழை பெய்தது. இந்த மழை 2016 துவக்கம் வரை தொடரும். இந்தியாவின் தென் மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யும்' என ஐ.நா., தெரிவித்துள்ளது.
ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா., சபையின் பொருளாதார, சமூக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பசிபிக் மற்றும் ஆசிய நாடுகளில் 'எல் நினோ' வெப்பத் தாக்கம், 1998 முதல் சீதோஷ்ண நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டும் அதன் தாக்கம் உள்ளது. இதை சமாளிக்க அனைத்து பிராந்தியங்களும் ஒருங்கிணைந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கம்போடியா, தென் இந்தியா, கிழக்கு இந்தோனேஷியா, மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ், மத்திய மற்றும் வட தாய்லாந்து ஆகிய நாடுகளில்,எல் நினோவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தெற்கு ஆசிய நாடுகள்இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மிக கன மழை பெய்யும். 1997 - 98க்கு பின், எல் நினோவின் தாக்கம் 2015 - 16ல், கடுமையாக இருக்கும். இந்தியாவின் தென் மாநிலங்களிலும், இலங்கையிலும் சராசரியை விட கூடுதலாக மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்படும். குறிப்பாக நகர்ப்பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சென்னையில் நவம்பரில் 21.7 அங்குல மழை பதிவாகி கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால் எல் நினோவுக்கும், சென்னையில் பெய்யும் கன மழைக்கும், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை. இருந்தாலும் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து சீதோஷ்ண நிலை மாற்றமடைய, எல் நினோவும் ஒரு காரணம்.இவ்வாறு ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தால் தான் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவ மழையும் தீவிரமடைந்து உள்ளது' என சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.
'இந்தியா வில், எல் நினோவின் தாக்கத்தால் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடையவில்லை. மழை தீவிரமடைவதற்கான பல காரணங்களில் எல் நினோவும் ஒன்று' என, இந்திய வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.