மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-
வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு டிசம்பர் 14முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பவேண்டும். சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
இதற்காக பள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் பெறப்படும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக் கல்வி அலுவலர்களின் கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாற்றுச் சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர்.
இந்தப் பணிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்தி தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.
பத்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ்,இதர சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றி வழங்க அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.