சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தென் திசையில் நகர்ந்ததால் சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியது. மேலும், எல்நினோ தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 7ம் தேதி வலுவடையத் தொடங்கிய வட கிழக்கு பருவமழை கடந்த 28ம் நாட்களாக கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து நீர்நிலைகளுக்கும், கொள்ளளவைவிட கூடுதலாக மழை நீர் வந்தது. அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் சென்னை நகரத்தையே மூழ்கடித்து சென்றுவிட்டது. பல ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் பள்ளிகள், சமூகநலக் கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த சோகம் தொடரும் அதேவேளையில் தென் மேற்கு வங்கக் கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று முன்தினம் உருவானது. அதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரிய அளவில் மழை இல்லை. இருப்பினும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக காரைக்காலில் நேற்று 160 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் 10 மிமீ மழை பெய்துள்ளது. ஆனால், சென்னையில் நேற்று மழை பெய்யவில்லை.
இதற்கிடையே, பிபிசி தமிழோசை செய்தியில், வரும் 11ம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிரவும் பசிபிக் கடல் பகுதியில் எல்நினோ மாற்றமடைந்துள்ளதால் தமிழகத்துக்கு மீண்டும் மழை ஆபத்து உள்ளது என்றும் வலைதளங்களில் செய்தியும் பரவி வருகிறது. இதனால் மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்(பொறுப்பு) பாலச்சந்திரன் கூறியதாவது:
வங்கக் கடலில் தென்மேற்கு திசையில் மையம் கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்த கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கனமழை என்பது 60 மிமீ முதல் 120 மிமீ வரை பெய்யும் அளவைத்தான் கனமழை என்கிறோம். தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இல்லை. எல்நினோ மாற்றத்தால் தமிழகத்தில் கனமழை பெய்து சேதம் ஏற்படும் என்று வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்களில் உலவும் செய்தி வதந்திதான். எல்நினோவில் மாற்றம் ஏதும் இல்லை. சென்னைக்கு கனமழை ஆபத்து இல்லை. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
எந்த இடத்தில் எவ்வளவு மழை?
கொடவாசல், பாபநாசம் 130 மிமீ, திருவாரூர், நாகப்பட்டினம், நன்னிலம் 110 மிமீ, மன்னார்குடி 90 மிமீ, பாண்டவையார் 80 மிமீ, நீடாமங்கலம், வலங்கைமான், மயிலாடுதுறை 70 மிமீ, திருவிடை மருதூர் 60 மிமீ, கும்கோணம், மதுக்கூர், திருவையாறு, சீர்காழி 50மிமீ, திருத்துறைப்பூண்டி, மணல்மேல்குடி, தரங்கம்பாடி, பட்டுக்கோட்டை,தொண்டி 40 மிமீ, தஞ்சாவூர், கறம்பைக்குடி, மணிமுத்தாறு, ராமேஸ்வரம், வல்லம், ஒரத்தநாடு, கொளச்சல், நாகர்கோயில், கன்னியாகுமரி, பேராவூரணி, நாங்குனேரி, வேதாரண்யம், கொடைக்கானல் 30மிமீ, இளையாங்குடி, முத்துப்பேட்டை, குன்னூர், திருவாடணை, சிதம்பரம் 20 மிமீ மழை பெய்துள்ளது.